கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு பெண் சரமாரியாக வெட்டி படுகொலை


கச்சிராயப்பாளையம் அருகே பரபரப்பு பெண் சரமாரியாக வெட்டி படுகொலை
x
தினத்தந்தி 14 May 2021 10:57 PM IST (Updated: 14 May 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண்ணை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்

2-வது திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மனைவி சங்கீதா(வயது 37). இவர்களுக்கு துரை, கோகுல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனோகர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அதன்பிறகு சங்கீதா கூலி வேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கந்தன் என்கிற கந்தசாமி(40) என்பவரை சங்கீதா 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கந்தன் ஏற்கனவே திருமணமானவர்.

கருத்து வேறுபாடு

இதற்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கந்தனை பிரிந்து மாத்தூர் கிராமத்தில் தனது மகன்களுடன் சங்கீதா வசித்து வந்தார். நேற்று மதியம் வெளியில் சென்று வருவதாக மகன்களிடம் கூறிவிட்டு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
இந்தநிலையில் பால்ராம்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து மண்மலை செல்லும் சாலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வெளியானது. இதை அறிந்து மாத்தூர் கிராம மக்கள் பால்ராம்பட்டு பஸ்நிறுத்தம் பகுதிக்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

படுகொலை

அப்போது அவர் சங்கீதா என்பது தெரியவந்தது. அவரது தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது.
இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சங்கீதாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

நடத்தையில் சந்தேகம்

சங்கீதா கொலை செய்யப்பட்ட பின்னர் கந்தன் தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடினர். அப்போது கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி அருகே பதுங்கி இருந்த கந்தனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கீதா தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்றது, மாத்தூர் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் நபருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் ஆகிய காரணங்களால் சங்கீதாவை கந்தன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு கந்தனை போலீசார் கைது செய்தனர். 
நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அவரது 2-வது கணவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.








Next Story