கடும் நடவடிக்கை உத்தரவால் வெறிச்சோடிய கடை வீதிகள்


கடும் நடவடிக்கை உத்தரவால் வெறிச்சோடிய கடை வீதிகள்
x
தினத்தந்தி 14 May 2021 11:41 PM IST (Updated: 14 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவால் நேற்று காரைக்குடியில் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

காரைக்குடி,

முழு ஊரடங்கில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவால் நேற்று காரைக்குடியில் கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முழு ஊரடங்கு அமல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகளான காய்கறி கடைகள், மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை வாங்க வரும் நபர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு காலக்கட்டத்தில் காரணம் இல்லாமல் வெளியே சுற்றித்திரியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டும் வருகின்றனர்.
ஆனால் கடந்த சில தினங்களாக ஊரடங்கில் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் எவ்வித காரணம் இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தனர். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடும் உத்தரவு

இதையொட்டி நேற்று முன்தினம் தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடமாடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று ஊரடங்கு காலக்கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதுதவிர காரணம் இன்றி பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

வெறிச்சோடிய கடைவீதிகள்

இதற்கு முன்பு ஊரடங்கு காலக்கட்டத்தில் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் ஏராளமானோர் சுற்றித்திரிந்த நிலையில் நேற்று முதல் போலீசாரின் தீவிர சோதனை காரணமாக காரைக்குடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் மதியவேளையில் சாலைகள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story