குளச்சலில் விசைப்படகு, வள்ளம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


குளச்சலில் விசைப்படகு, வள்ளம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 14 May 2021 11:55 PM IST (Updated: 14 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குளச்சலில் விசைப்படகுகள், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

குளச்சல்:
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குளச்சலில் விசைப்படகுகள், வள்ளம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல் துறைமுகம்
குளச்சலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய சுறா, இறால், கேரை, கணவாய் மற்றும் செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வருகிறது. 
கரை திரும்பிய விசைப்படகுகள்
இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், இதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை  ஆய்வுமையம் எச்சரித்து உள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் 16-ந்தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று குளச்சல் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளியாகுளம் மழை வெள்ளத்தால் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. பத்தறை வயல்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
கடலில் பலத்த காற்றும் வீசுவதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. கரை திரும்பிய  விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல் 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவைகளும் கடற்கரையில் மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story