‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடங்க அரசு அனுமதி


‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம்  தொடங்க அரசு அனுமதி
x
தினத்தந்தி 14 May 2021 6:55 PM GMT (Updated: 14 May 2021 6:55 PM GMT)

கர்நாடகத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் ெதாடங்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் ெதாடங்க அரசு அனுமதி அளித்து உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசு ஒப்புதல்

பெங்களூரு அருகே உள்ள மாலூரில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதிக்கு ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட நல்ல தொடர்பு வசதிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான அனைத்து ஒப்புதலையும் அரசு வழங்கியுள்ளது.

‘கோேவக்சின்’ தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் தொடங்க நிர்வாக ரீதியான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. அந்த பணிகள் துரிதகதியில் முடிக்கப்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கும். 

அதேபோல் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் உள்பட தடுப்பூசி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி நிறுவனங்களை கர்நாடகத்தில் தொடங்க முன்வந்தால் அதற்கு அரசு ஒப்புதல் அளிக்க தயாராக உள்ளது.

கட்டமைப்பு வசதிகள்

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கிராமப்புறங்களில் தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். சட்டமன்ற தொகுதிகளில் தலா 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதில் ஆக்சிஜன், ஐ.சி.யு. படுக்கைகளும் இருக்கும்.

வருகிற ஆகஸ்டு மாதத்தில் 40 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆகும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் தடுப்பூசி உற்பத்தி அதிகமாகும். நாட்டில் இதுவரை 19 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நன்கொடை

கர்நாடகத்தில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்கள், சமூக பொறுப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு அதிகளவில் உதவிகளை செய்து வருகின்றன. நிதி மற்றும் உபகரணங்களை வழங்குகிறார்கள். முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கும் நன்கொடை அளிக்கிறார்கள். மத்திய அரசும் உதவிகளை செய்து வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வந்துள்ளன. இந்த உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செல்வக்குமார், உமா மகாதேவன் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story