நெல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம்-நூதன தண்டனை
நெல்லையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நூதன தண்டனையும் வழங்கினர்.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த 10-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கில் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளுக்கு செல்வதாகவும், பல்வேறு இடங்களுக்கு செல்வதாகவும் கூறி சாலைகளில் சுற்றித்திரிந்தனர். போலீசாரும் அவர்களுக்கு அறிவுரைகள் கூறி விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்தி வந்தனர். இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை.
இதையடுத்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. நெல்லை சந்திப்பு அண்ணா சிலை, டவுன் ஆர்ச், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு சாலைகளை முழுமையாக மூடினர். மேலும் அங்கு போலீசார் நின்று கொண்டு அந்த வழியாக வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன், (குற்றம்-போக்குவரத்து) மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் மாநகரம் முழுவதும் முழு ஊரடங்கை தீவிரப்படுத்தினர். அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதித்தனர். இதனால் வழக்கம் போல் சுற்றித்திரிய வந்த பலர் தொடர்ந்து பயணிக்க முடியாமல் திணறினார்கள். சிலர் உடனடியாக தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இந்த கட்டுப்பாடுகளையும் மீறி, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று இவ்வாறு வெளியே வந்தவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வேன், கார், லாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லையில் காரணம் இன்றி வெளியே வலம் வருவோரை பிடித்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். பின்னர் அவர்கள் கைகளை உயர்த்திக் கொண்டு "இனி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிய மாட்டேன்" என்று உறுதிமொழி எடுக்கச் செய்தனர். ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் நிறுத்தி, இனிமேல் தேவையில்லாமல் வெளியே வரமாட்டேன் என்று உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் கூறுகையில், ‘‘கொரோனா பெருந்தொற்றை குறைக்க தமிழக அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தேவையில்லாமல் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து நோய் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story