சேலத்தில் எளிமையாக நடந்த ரம்ஜான் பண்டிகை வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகை
புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு கடைப்பிடிப்பார்கள். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி நோன்பு தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே வழக்கமான தொழுகைகள் எதுவும் பள்ளிவாசல்களில் நடைபெறவில்லை.
இந்த நிலையில், 30 நாட்கள் நோன்பு முடிவடைந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று முஸ்லிம்கள் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து உறவினர், நண்பர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதும், பிரியாணி மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி கொள்வதும் வழக்கம். ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
வீடுகளில் சிறப்பு தொழுகை
ஆனால் சேலம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக மசூதிகள் மற்றும் பள்ளிவாசல் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே நேற்று சிறப்பு தொழுகையை நடத்தினார்கள். மேலும் வீட்டில் உள்ளவர்களை தவிர நேரில் யாரையும் சந்திக்கவில்லை. போன் மூலமாகவே நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
சேலம் மாநகரில் கோட்டை, செவ்வாய்பேட்டை, ஜான்சன்பேட்டை, அழகாபுரம், சூரமங்கலம், நெத்திமேடு, கிச்சிபாளையம், ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை அவரவர் வீடுகளில் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகளின் மொட்டை மாடிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல் தம்மம்பட்டி, கெங்கவல்லி, மேட்டூர், எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டுதல்
கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை நாளில் சிறப்பு தொழுகை முஸ்லிம்களின் வீடுகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோயில் இருந்து உலகம் விடுபடவும், கொரோனா முற்றிலும் ஒழியவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பவும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story