ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: சேலத்தில் முக்கிய சாலைகளை அடைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு


ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: சேலத்தில் முக்கிய சாலைகளை அடைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 2:29 AM IST (Updated: 15 May 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு எதிரொலியாக நகரின் முக்கிய சாலைகளை அடைத்து போலீசார், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சேலம்:
சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு எதிரொலியாக நகரின் முக்கிய சாலைகளை அடைத்து போலீசார், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தது. நேற்று 5-வது நாளாக பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து இயங்கவில்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள், டீக்கடைகள், பழக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பகுதிகளில் நேற்று காலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
ஆட்டோ, கார் மற்றும் மொபட், மோட்டார் சைக்கிளில் பொதுமக்கள் அங்கும், இங்கும் சென்று வந்ததால் முக்கிய சாலைகள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டன. அதன்பிறகு மதியம் 12 மணியுடன் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 
கண்காணிப்பு தீவிரம்
பொதுமக்களின் நடமாட்டமும் சற்று குறைந்தது. சேலம் மாநகரில் மதியம் 12 மணியை கடந்த பிறகும் சாலைகளில் வாகனங்கள் சென்று வந்ததை காண முடிந்தது. சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்  மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் போலீஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்தோஷ் குமார் தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதாவது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், புதிய பஸ்நிலையம், 5 ரோடு உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் மூலம் அடைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கை
மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சென்றவர்களை மட்டுமே போலீசார் வாகனங்களில் செல்ல அனுமதித்தனர். மேலும் முககவசம் அணியாமலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும் வாகனங்களில் போலீசார் ரோந்து வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, 5 ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Next Story