திருத்தணி, பள்ளிப்பட்டில் வீட்டு மாடியில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வழிபாடு
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகை தினத்தில் வீட்டு மாடியில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை நடத்தினார்கள்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாக்களில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 31 நாட்களாக ரம்ஜான் மாத நோன்பை கடைபிடித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி பிறை தென்பட்டதை தொடர்ந்து, நேற்று ரம்ஜான் பண்டிகை தினமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தற்போது கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக கோவில்கள், தேவாலயங்கள் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்துள்ளது.
இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த முடியாமல் போனது. இதனால் முஸ்லிம்கள் குடும்பத்தினர் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நேற்று காலை தங்கள் வீட்டு மாடிகளில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நடத்தி முடித்தனர்.
வழிபாட்டுக்கு பின்னர், ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துக்களை கூறி கொள்ளாமல் சற்று விலகியே இருந்து தொடாமல் பெருநாள் வாழ்த்துக்களை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story