கொரோனா நிவாரண நிதி முதல் தவணை: 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் இன்று முதல் வழங்கப்படும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தகவல்


கொரோனா நிவாரண நிதி முதல் தவணை: 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் இன்று முதல் வழங்கப்படும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2021 7:38 AM IST (Updated: 15 May 2021 7:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் 5¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கூட்டுறவுத் துறை வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

கொரோனா காலகட்டத்தில் மக்களின் துன்பங்களை போக்கும் விதமாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆறுதலளிக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படுமென தேர்தல் வாக்குறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 976 குடும்பதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.233 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.116 கோடியே 79 லட்சம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் தினந்தோறும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், சுதர்சனம், கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், சந்திரன், கணபதி, ஜோசப் சாமுவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story