அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானை அட்டகாசம்
கூடலூர் அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மேலும் பாக்கு, வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.
கூடலூர்
கூடலூர் அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. மேலும் பாக்கு, வாழை மரங்களையும் சேதப்படுத்தியது.
ஊருக்குள் புகுந்த காட்டுயானை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொரப்பள்ளி, தோட்டமூலா, சில்வர் கிளவுட், கெவிப்பாரா, மேல்கூடலூர், அள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக முதுமலை வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானை ஒன்று அடிக்கடி முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அள்ளூர் பகுதியில் அந்த காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து அங்கு விஸ்வநாதன் என்பவர் பயிரிட்டு இருந்த பாக்கு, வாழை மரங்களை சேதப்படுத்தியது.
குழாய்கள் உடைப்பு
பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. தொடர்ந்து கழிவறை குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது. அங்கிருந்து வெளியேறிய காட்டுயானை தொரப்பள்ளி சாலையில் நடந்து சென்றது.
செல்லும் வழியில் சாலையோரம் பயிரிட்டு இருந்த பாக்கு, வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. விடிய, விடிய அந்த பகுதியில் முகாமிட்ட காட்டுயானை, அதன்பிறகு முதுமலை வனத்துக்குள் சென்றது.
நேற்று காலையில் காட்டுயானையால் விவசாய பயிர்கள் மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் சேதம் அடைந்து இருப்பதை கண்ட பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உரிய இழப்பீடு
அதன்பேரில் வனத்துறையினர் நேரில் வந்து, சேதங்களை பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- முதுமலை வனத்தில் இருந்து காட்டுயானைகள் தினமும் வெளியேறி ஊருக்குள் வருகிறது. வீடுகளை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று விடுகிறது.
தற்போது பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து உள்ளது. அதை மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுயானைகளால் சேதம் அடைந்த வீடுகள், பயிர்களுக்கான உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
காட்டுயானைகள் நிரந்தரமாக ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story