ஓடும் ரெயிலில் தன்னிடம் நகை, பணம் பறித்த கொள்ளையனை துணிச்சலுடன் பிடித்த மந்திராலயா அதிகாரி


ஓடும் ரெயிலில் தன்னிடம் நகை, பணம் பறித்த கொள்ளையனை துணிச்சலுடன் பிடித்த மந்திராலயா அதிகாரி
x
தினத்தந்தி 15 May 2021 3:15 PM IST (Updated: 15 May 2021 3:15 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் தன்னிடம் நகை, பணம் பறித்த கொள்ளை கும்பலை சேர்ந்தவனை மந்திராலயா அதிகாரி ஒருவர் துணிச்சலுடன் பிடித்து உள்ளார்.

கொள்ளையனை பிடித்த அதிகாரி

மந்திராலயாவில் வருவாய் மற்றும் வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய் வாக்தாரே (வயது53). இவர் சம்பவத்தன்று காலை மின்சார ரெயிலில் சி.எஸ்.எம்.டி. வந்து கொண்டு இருந்தார். ரெயில் மஸ்ஜித் வந்தவுடன் பெட்டியில் இருந்தவர்கள் இறங்கிவிட்டனர். அதிகாரியுடன் பெட்டியில் ஒரு பெண் உள்பட 4 பேர் கும்பல் இருந்தது. இந்தநிலையில் அந்த கும்பல் அதிகாரியை தாக்கி அவரிடம் இருந்த தங்கச்சங்கிலி, பணத்தை பறித்தது.

இந்தநிலையில் ரெயில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே சென்றதும் அதிகாரி கொள்ளை கும்பலை சேர்ந்த வாலிபரை பிடித்தார். அந்த வாலிபர் தப்பிக்க அதிகாரியை பயங்கரமாக தாக்கினார். எனினும் அதிகாரி அவரை தப்பிக்க விடாமல் உடும்பு பிடியாக பிடித்து கொண்டார். இந்தநிலையில் ரெயில் நிலையம் அருகில் வந்தவுடன் பெண் உள்பட 3 பேரும் தப்பியோடினர்.

பெண் கைது

இதற்கிடையே மற்றொரு ரெயிலில் இருந்த பயணிகளும் ஓடிவந்து அதிகாரிக்கு உதவி செய்தனர். இதையடுத்து கொள்ளை கும்பலை சேர்ந்த வாலிபர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர் சீத்தாகேம்ப்பை சேர்ந்த ஆசிப் சேக் என்பது தெரியவந்தது. மேலும் அவரது கூட்டாளிகள் அதே பகுதியை சேர்ந்த ஆமீர் செய்யது, அக்ரம், பெண் சேர்பானு (வயது22) என்பது தெரியவந்தது. இதில் போலீசார் சேர்பானுவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.

இந்தநிலையில் தனி ஆளாக துணிச்சலுடன் கொள்ளை கும்பலை பிடித்த மந்திராலயா அதிகாரியை பயணிகள், போலீசார் பாராட்டினர்.


Next Story