அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் அதிகளவில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வினியோகிப்பது எப்படி? அரசு பதில் அளிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் எப்படி அதிகளவில் ரெம்டெசிவிரை வாங்கி பொதுமக்களுக்கு வினியோகிக்கின்றனர் என பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து
நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை வீசிவருகிறது. நோய் பாதிப்பு அதிகரித்ததால் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு, மாநிலங்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை வழங்கி வருகிறது. இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லை, அதே நேரத்தில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் அதை அதிகளவில் வாங்கி டுவிட்டர் மூலம் கேட்பவர்களுக்கு வழங்கி வருகின்றனர் என கூறப்பட்டு இருந்தது.
பதில் அளிக்க உத்தரவுஇந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி அடங்கிய அமர்வு முன் நடந்தது.அப்போது நீதிபதிகள், ‘‘ரெம்டெசிவிர் மருந்து மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது எனில், அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் எப்படி தனியாளாக ரெம்டெசிவிரை வினியோகிக்க முடியும். எங்களை பொருத்தவரை இது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்படுவது ஆகும்.எனவே அரசியல், சினிமாவை சேர்ந்தவர்கள் எப்படி ரெம்டெசிவிரை வினியோகம் செய்கின்றனர் என மராட்டியம் மற்றும் மத்திய அரசு வரும் 19-ந் தேதி பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.