கொரோனா நிவாரண நிதி வாங்க ரேஷன்கடைகளில் குவிந்த மக்கள்


கொரோனா நிவாரண நிதி வாங்க ரேஷன்கடைகளில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 15 May 2021 9:33 PM IST (Updated: 15 May 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வாங்க ரேஷன்கடைகளில் மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்:

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 4 அரிசி ரேஷன்கார்டுகளுக்கு, 1,035 ரேஷன்கடைகள் மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது. 

மேலும் கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை தவிர்க்க, தினமும் 100 முதல் 200 ரேஷன்கார்டுகள் வீதம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த சில நாட்களாக ரேஷன்கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர். 

இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன்கடைகளிலும் நிவாரணத்தொகை வழங்கும் பணி நடந்தது. இதற்காக காலை 8 மணிக்கே மக்கள் ஆர்வமுடன் ரேஷன்கடைகளில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்படாமல் தடுப்பதற்கு சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து பொதுமக்களை, போலீசார் வரிசையில் நிற்க வைத்தனர். அந்த வகையில் திண்டுக்கல் நகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்களில் ரேஷன்கடைகளின் முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. 

அதில் காத்திருந்து மக்கள் நிவாரணத்தொகை பெற்று சென்றனர். காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

Next Story