அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்
கோவை மாவட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
கோவை
கோவை மாவட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), பி.ஆர்.ஜி.அருண் குமார் (கவுண்டம்பாளையம்), அம்மன் அர்ச்சுனன் (கோவை வடக்கு), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), வி.பி.கந்தசாமி (சூலூர்),
அமுல்கந்தசாமி (வால்பாறை), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) ஆகியோர் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதி, குறிப்பாக ஆக்சிஜன் படுக்கை வசதி குறைவாக உள்ளது.
மேலும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாகுறை மற்றும் ஆம்புலன்ஸ் காத்திருப்பு அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள், கோவேக்சின் முதல் டோஸ் போட்டும், 2-வது டோஸ்க்கான காலம் முடிந்த பின்னரும் தடுப்பூசி போட இயலாத நிலை என கோவை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போர்க்கால நடவடிக்கை
எனவே கோவை மாவட்ட கலெக்டர் கொரோனா முதல் அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கையை போல தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உயிர் இழப்புகளை தவிர்த்தும், தொற்று பரவலை தடுத்தும் கோவை மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும். வீதி, வீதியாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கொரோனா வார்டுகள் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். கிரமப்புறங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுத்தால் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுத்து, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.
ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளை தட்டுபாடின்றி கிடைக்க துரித நடவடிக்கை எடுப்பதோடு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் இந்த மருந்து கிடைக்க வழி செய்ய வேண்டும்.
கோவையில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டும். கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள காலி படுக்கைகள் விபரம் குறித்து பொதுமக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் கொரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும். தொற்றின் தன்மைக்கு ஏற்ப கொரோனா நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ குழுக்கள் அமைக்க வேண்டும்.
சோதனை சாவடிகள்
கோவை எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகளில் பிறமாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். முழு ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்தால், பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தடுக்கலாம்.
மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story