ஜூன் மாதம் 2-வது வாரத்தில் கரூர் காகித ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்


ஜூன் மாதம் 2-வது வாரத்தில் கரூர் காகித ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 15 May 2021 11:41 PM IST (Updated: 15 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாதம் 2-வது வாரத்தில் கரூர் காகித ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்
கொரோனா நிவாரண நிதி
கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி, ஆண்டாங்கோவில் புதூர், காதப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். கரூர் எம்.பி. ஜோதிமணி முன்னிலை வகித்தார். 
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மின்சாரம் மற்றும் மது விளக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை வழங்கி அதன் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் உற்பத்தி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி கரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளோம். மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ெமாத்தம் ரூ.62 கோடி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா காலத்தில் ஆட்சி செய்தவர்களிடம் நிவாரண நிதி கேட்டபோது ரூ.ஆயிரம் மட்டுமே வழங்கினர். இதனால்தான் இருகட்டமாக இந்த நிதி வழங்கப்படுகிறது. 
கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் 250 சிலிண்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் வெளிநாட்டில் இருந்து வருவதால் இந்த மாத இறுதிக்குள் உபகரணங்கள் வந்துவிடும். ஜூன் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் தொடங்கி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 
சமமான மருத்துவம்
கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை. தேவையான அளவிற்கு ஆஜ்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்வதற்குரிய பணிகளை மாவட்ட கலெக்டர் சிறப்பாக செய்து வருகிறார். 
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் உத்தரவு. மாவட்டத்தில் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். 
அனைவருக்கும் தமிழகத்தில் சமமான மருத்துவம் கிடைக்க வேண்டும், தொற்றில் இருந்து அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும், கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக முதல்-அமைச்சரின் நோக்கம். 
முழுமூச்சில்...
காகித ஆலையைத் தவிர வேறு ஆலைகளிலும் உற்பத்தி செய்வதற்கு ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு எந்திரம் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன்பின்னர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக அரசு நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் தாரணிசரவணன், கோல்ட்ஸ்பாட் ராஜா, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜா, மூக்கணாங்குறிச்சி சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story