இன்று முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி கடைகளில் அலைமோதிய கூட்டம்; விலை உயர்வால் பொதுமக்கள் அவதி


இன்று முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி கடைகளில் அலைமோதிய கூட்டம்; விலை உயர்வால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 May 2021 12:00 AM IST (Updated: 16 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வெண்ணந்தூர்:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரொனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்றும், மற்ற நாட்களில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் டீக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. 
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஊரடங்கின் போது மருந்து கடைகள், ஓட்டல்களை தவிர மற்ற வணிக நிறுவனங்கள் செயல்படாது. இதனால் நேற்று காலை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கூட்டம் அலைமோதியது
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று காலை 6 மணிக்கு காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இவற்றில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து அறிவுறுத்தினர்.
வெண்ணந்தூரில் இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி, மளிகை பொருட்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கூடுதலாக வாங்கி சென்றனர்.
விலை உயர்வு 
இதனிடையே ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வெளியூர்களுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரமுடியவில்லை. இதனால் வரத்து குறைவாக இருந்ததால், வெண்ணந்தூர் பகுதியில் நேற்று காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும், ரூ.30-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது. இதேபோல், கத்தரி, மிளகாய், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

Next Story