நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம்: 5.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி; கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் 5.25 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியை கலெக்டர் மெகராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
கொரோனா நிவாரணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி பதவி ஏற்ற உடனே கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கும் ஆணையில் கையொப்பமிட்டார். அந்த ஆணையை செயல்படுத்தும் வகையில் 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை சென்னையில் வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 15-ந் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ.105 கோடி
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் நிவாரண தொகை பெறுவதற்கு கடந்த 10-ந் தேதி முதல் 3 நாட்கள் டோக்கன் வழங்கும் பணி நடந்தது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினர். இந்தநிலையில் நாமக்கல்லில் நேற்று கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணி நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 82,509 பேருக்கும், திருச்செங்கோடு தொகுதியில் 83,996 பேருக்கும், பரமத்திவேலூர் தொகுதியில் 84,461 பேருக்கும், நாமக்கல் தொகுதியில் 99,945 பேருக்கும், ராசிபுரம் தொகுதியில் 86,733 பேருக்கும், சேந்தமங்கலம் தொகுதியில் 87,648 பேருக்கும் என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.105 கோடியே 5 லட்சம் வழங்கப்பட உள்ளது என்றார்.
200 குடும்ப அட்டைதாரர்களுக்கு...
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ராமலிங்கம் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தி.மு.க. இலக்கிய அணி புரவலர் மணிமாறன், நகர பொறுப்பாளர்கள் சிவக்குமார், ராணா ஆனந்த் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 935 ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. தினமும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story