முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் ராமன் எச்சரிக்கை
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் ஜெ.எஸ். டபிள்யூ. தனியார் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தினமும் 14 டன் ஆக்சிஜன் தேவைப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 21 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆக்சிஜன் இருப்பு
அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனியார் ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு உரிய ஆக்சிஜன் வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதுபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லை என்று நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தற்போது 14 டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்படுவதால் கூடுதலாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தற்போது தடையின்றி ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது. இனிமேல் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது.
கடும் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கின்போது, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முழு ஊரடங்கை முழுவதுமாக கடைபிடிக்க வேண்டும்.
முழு ஊரடங்கின்போது தேவை இன்றி யாரும் வெளியில் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 10 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்க கூடாது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராமன் கூறினார்.
இந்த பேட்டியின் போது, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story