தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு


தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு
x
தினத்தந்தி 16 May 2021 3:14 AM IST (Updated: 16 May 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறினார்.

தென்காசி:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று முதல் காலை 10 மணிக்கு மேல் மருந்து கடைகள், பால் கடைகள், சிறிய உணவகங்கள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்று அரசு புதிய கட்டுப்பாடு விதித்தது.  

அதன்படி தென்காசி நகரில் நேற்று காலையில் காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. இதனால் காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணிக்க பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 

மேலும் போலீசார் தென்காசி நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகருக்குள் வரும் அனைத்து எல்லைப்பகுதியிலும் போலீசார் நின்று, வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். உரிய காரணங்கள் இன்றி வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

வார இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்கனவே முழு ஊரடங்கிற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே இன்று எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட தற்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருகிற 17-ந் தேதி (நாளை) முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ -பதிவு முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்பது குறித்து முறையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். 

மேலும் மாவட்டத்தில் மொத்தம் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உரிய காரணங்கள் இல்லாமல் செல்லக்கூடாது. அவ்வாறு செல்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

 மேலும் தற்போது மாவட்டத்தில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சாலைகள் வழியாக இல்லாமல் விளையாட்டு மைதானங்களில் விளையாடுபவர்கள், நகரின் வெளிப்புறங்களில் கூட்டமாக செல்பவர்கள் போன்றவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை இதன்மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அனைத்து விதிமுறைகளும் பொதுமக்களின் நலனுக்காக தான் செயல்படுத்தப்படுகின்றன. எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story