திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின


திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 16 May 2021 4:53 PM IST (Updated: 16 May 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

திருவண்ணாமலை

பேரி கார்டுகள் வைத்து அடைப்பு

திருவண்ணாமலையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் திருவண்ணாமலையில் எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று ரேஷன் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்பட்டதால் அதனை வாங்க செல்கிறோம் என்று மோட்டார் சைக்கிளில் பலர் வலம் வந்தனர். 

முக்கிய சாலைகளில் போலீசார் பேரிகார்டுகள் வைத்து முழுவதுமாக சாலையை அடைந்து வைத்திருந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு செல்வதாகவே கூறிவிட்டு சென்றனர். போலீசார் அடிக்கடி வந்த பாதையிலேயே வந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை பதிவு செய்து கொண்டனர். நேற்று பகலில் குறைந்த அளவிலான மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வந்ததை காண முடிந்தது.

சாலைகள் வெறிச்சோடின

திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலும் தேவையின்றி யாரும் செல்லக்கூடாது என்று பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

 கிரிவலப்பாதையில் 200-க்கும் மேற்பட்ட சாதுகளுக்கு தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கினர். கிரிவலப்பாதை மட்டுமின்றி திருவண்ணாமலை நகரத்திலும் போலீசார் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் சைரன் ஒலித்த படி ரோந்து சென்றனர். முழு ஊரடங்கால் நேற்று பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடின.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் டீக்கடை, மளிகைக்கடை, காய்கறி கடைகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2 ஆயிரம் பெற டோக்கன் பெற்ற குடும்ப அட்டை தாரர்கள் நேற்று காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கன்களை விற்பனையாளர்களிடம் கொடுத்து கொரோனா நிவாரண நிதியை பெற்றுச் சென்றனர்.

Next Story