மும்பை, கொங்கனில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை; ‘டவ்தே ’ புயலை எதிர்கொள்ள தயார் நிலை; மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு


மும்பை, கொங்கனில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை; ‘டவ்தே ’ புயலை எதிர்கொள்ள தயார் நிலை; மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2021 5:04 PM IST (Updated: 16 May 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

‘டவ்தே ’ புயலால் மும்பை, கொங்கன் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

புயலாக மாறியது
இந்த புயல் தாழ்வு மண்டலமாக வலு பெற்று நேற்று முன்தினம் இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்தது.இந்தநிலையில் நேற்று அது புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘டவ்தே' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மியான்மர் நாடு வைத்த பெயர். டவ்தே என்றால் மியான்மரில் ஒரு பல்லி இனம் என கூறப்படுகிறது.வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயல் நாளை (திங்கட்கிழமை) தீவிர புயலாக உருவெடுத்து, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

எச்சரிக்கை
புயலின் தாக்கம் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து மும்பை வானிலை ஆய்வு மைய சீனியர் இயக்குனர் சுபானி புதே கூறியதாவது:-

தக்ேத புயல் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் முதல் மும்பையில் மழை பெய்ய தொடங்கும். நாளை மும்பை மற்றும் வடக்கு கொங்கன் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும். அதே வேளையில் மும்பையில் இந்த புயல் அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.சிந்துதுர்க், ரத்னகிரி மாவட்டங்கள் சூறாவளி காற்று, பலத்த மழையால் பாதிப்பை சந்திக்கக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் இருக்கும். முழு கொங்கன் பகுதி மற்றும் மேற்கு மராட்டியத்தின் மலையோர மாவட்டங்களில் குறிப்பாக கோலாப்பூர், சத்தாராவில் மிக அதிக மழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் இன்றும், நாளையும் விடுக்கப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி ஆலோசனை
இதற்கிடையே புயல் காரணமாக பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட கடலோர மாவட்ட அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.அப்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தயார் நிலை
புயல் தாக்கம் இருக்கும் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எப்போது தேவைப்பட்டாலும் மீட்பு பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கலாம் என்பதால் அந்த மாவட்ட கலெக்டர்கள் தேவையான முன் எச்சரிக்கையுடன் மீட்பு உபகரணங்கள், மனித வளத்துடன் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்-மந்திரி ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவர் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story