தலைமை செயலகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்து கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது; சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


தலைமை செயலகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்து கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது; சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 May 2021 11:50 AM GMT (Updated: 16 May 2021 11:50 AM GMT)

தலைமை செயலகத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்து கூட்டம் நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து சிவா எம்.எல்.ஏ. ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 15 தினங்கள் மேலாகியும் பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

அலோபதி மருத்துவம் மட்டுமின்றி ஆயுஷ், சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளாலும் கொரோனா குணப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி சுகாதாரத்துறை அலோபதி மருத்துவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையை மாற்றி ஆயுஷ், சித்தா, ஓமியோபதி பிரிவுகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரானது

புதுச்சேரியில் ஜனநாயக முறையில் அனைத்து தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் தலைமை செயலர் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை மட்டும் தலைமை செயலகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து ஆலோசனை கேட்க யார் தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பித்தது யார் ? எந்த சட்ட விதிமுறையின் கீழ் தலைமை செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நிவாரண உதவி

கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற உடனடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும். கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், நிவாரண பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்க முடிவு செய்து உடனடியாக வழங்க வேண்டும்.

தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்கப்படாததால் குதிரை பேரம் நடந்து வருகிறது. எனவே உடனடியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா நடத்த வேண்டும். ஆட்சிக்கு வந்துள்ள அரசு சரியாக செயல்பட வேண்டும். எதிர்க்கட்சி பணியை தி.மு.க. திறமையாகவும், முழுமையாகவும் செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story