நாகையை சேர்ந்த 6 பேர் உள்பட 10 மீனவர்களின் கதி என்ன? மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை


நாகையை சேர்ந்த 6 பேர் உள்பட 10 மீனவர்களின் கதி என்ன? மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2021 7:56 PM IST (Updated: 16 May 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ‘டவ்தே’ புயலில் சிக்கிய நாகையை சேர்ந்த 6 மீனவர்கள் உள்பட 10 பேர் மாயமாகினர். அவர்களை மீட்டுத்தரக்கோரி குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், இவரது தந்தை இடும்பன்(50), அண்ணன் மணிவேல்(27) மற்றும் நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த தினேஷ்(35), இளஞ்செழியன்(35), நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த பிரவீன்(25) உள்பட 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் கடந்த 2-ந் தேதி கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் எச்சரிக்கையை அறிந்த அவர்கள் அவசர, அவசரமாக விசைப்படகை கொச்சி துறைமுகத்தை நோக்கி கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது படகு திடீரென புயலில் சிக்கியது. அங்கு எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு தூக்கி வீசப்பட்டு கடலில் மூழ்கியதாக தெரிகிறது.

10 பேர் மாயம்

இதில் நாகையை சேர்ந்த மணிகண்டன், இடும்பன் மணிவேல், தினேஷ், இளஞ்செழியன், பிரவீன் என 6 பேர் உள்பட 10 மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகினர். இந்த நிலையில் அவர்களுக்கு அருகில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பியவர்கள், நாகையை சேர்ந்த மீனவர்கள் கடல் அலையில் சிக்கி மாயமானது குறித்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அறிந்த அவர்கள், கடலுக்கு சென்ற தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாமந்தான் பேட்டையில் ஒன்று கூடினர்.

மீட்டுத்தரக்கோரி கதறி அழுதனர்

தொடர்ந்து மாயமான மீனவர்களை மீட்டுத் தரக்கோரி வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி பெண்கள் கதறி அழுதனர்.

மேலும் உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்க இந்திய கடற் படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை முடுக்கி விட வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

இதனிடையே புயலில் சிக்கி மாயமான நாகையைச் சேர்ந்த 6 மீனவர்களையும் மீட்டுத்தரக்கோரி சாமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Next Story