ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரிக்கும்


ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரிக்கும்
x
தினத்தந்தி 16 May 2021 9:14 PM IST (Updated: 16 May 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரிக்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரியில் ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரிக்கும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

விலை குறைப்பு

தமிழகத்தில் அரசு  உத்தரவின்படி ஆவின்பால் விலை குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி  அனைத்து வகை ஆவின் பாக்கெட் பாலுக்கும் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆவின் விலை குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தாலும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி ஆவின் பூத்கள், பால் விற்பனை கடைகளுக்கு சென்று பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

டபுள் டோன்ட் பால் அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.22.50-க்கும், பிரீமியம் பசும்பால் அரை லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.23.50-க்கும், சிறப்பு பதன பால் அரை லிட்டர் ரூ.26-ல் இருந்து ரூ.24.50-க்கும், நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் ரூ.28-ல் இருந்து ரூ.26.50 க்கும் மாற்றி அமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

 ஊட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் நவீன எந்திரங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விற்பனை அதிகரிக்கும்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகர் கூறுகையில், நீலகிரியில் 62 ஆவின் பூத்கள் உள்ளன. முழு ஊரடங்குக்கு முன்னர் தினமும் ரூ.18 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.13 ஆயிரத்து 500 முதல் 14 ஆயிரம் லிட்டர் வரை பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. 

நீலகிரியில் கொள்முதல் செய்யப்படும் பால் பவுடராக மாற்ற பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோவையில் இருந்து 7,500 லிட்டர் அதிக கொழுப்பு உள்ள பால் பாக்கெட்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 

நேற்று முதல் ஒரு லிட்டர் ரூ.3 குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் பால் விற்பனை அதிகரிக்கக்கூடும். இதன்மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் அரசின் ஆவின் பால் வாங்கி பயன் அடைய வேண்டும் என்றார். ஆவின் பால் விலை குறைப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

Next Story