தினமும் பாதிப்பில் புதிய உச்சம் படுக்கை வசதியின்றி தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள் மாற்று இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுமா?


தினமும் பாதிப்பில் புதிய உச்சம் படுக்கை வசதியின்றி தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள் மாற்று இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுமா?
x
தினத்தந்தி 16 May 2021 10:55 PM IST (Updated: 16 May 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி இன்றி கொரோனா நோயாளிகள் தரையில் படுத்திருக்கிறார்கள். எனவே அவர்களை மாற்று இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூர், 

கொரோனா

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்து விட்டது. இது வரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 350 படுக்கை வசதிகள் உள்ளது. இந்த படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. கூடுதலாக 50 படுக்கை வசதிகள் அமைத்தும் நோயாளிகளுக்கு படுக்கையை ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.

தரையில் படுத்த நோயாளிகள் 

இதனால் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவு வராண்டாவிலும், வார்டுக்கு வெளியிலும் தரையில் படுத்து உள்ளனர். இருப்பினும் வேறுவழியின்றி டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதேபோல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் நோயாளிகளுக்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரின் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்று நடவடிக்கை

இதன்படி ஏற்கனவே 4 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இதை அதிகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அதிக அழுத்தம் இல்லாத நிலை ஏற்படும். இதனால் மாற்று நடவடிக்கையாக கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை தயார்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதேநிலைதான் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய உச்சம் தொடுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்ட செல்கிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் மாற்று இடத்தில் படுக்கை வசதி அமைத்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும். 

வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடியாது 

 இது பற்றி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் அளவுக்கு மீறி நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருவதால் அவர்களை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அங்கும் இதே நிலை தான் உள்ளது. ஆகவே வரும் நோயாளிகளை வெளியில் அனுப்பாத அளவுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

Next Story