கரூரில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு


கரூரில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 10:58 PM IST (Updated: 16 May 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

அரசு அறிவித்த முழு ஊரடங்கு விதிமுறைகள் கரூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடியது.

கரூர்
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளையும் திறக்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
கடைகள் அடைப்பு
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கில் கரூர் நகரப்பகுதியில் உள்ள அனைத்து டீக்கடைகள், மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளும் திறக்கப்படவில்லை. மேலும் ஆட்டோக்கள், கார்கள் என எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் லைட்ஹவுஸ், பஸ்நிலையம், ராயனூர், பசுபதிபாளையம், வையாபுரிநகர், காந்திகிராமம் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. 
முழு ஊரடங்கில் சில ஓட்டல்கள் மட்டும் அரசு அறிவித்த குறிப்பிட்ட நேரங்களில் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் வந்து வாங்கி சென்றதை காணமுடிந்தது. 
போலீசார் அபராதம்
மேலும் கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் நின்று கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வந்தவர்களுக்கும், முககவசம் அணியாமல் வந்தவர்களையும் பிடித்து அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 
பால்விற்பனை
மேலும் கொரோனா பரவல் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின.

Next Story