அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை


அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை
x
தினத்தந்தி 16 May 2021 11:17 PM IST (Updated: 16 May 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் தலைமறைவாகி விட்டார்.

ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் தலைமறைவாகி விட்டார்.
நடத்தையில் சந்தேகம்
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவருடைய மனைவி உமா (33).
இவர்களுக்கு அஜித் (11) என்ற மகனும், காவியா (9) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையம் அருகில் சொந்தமாக பைகள் தைக்கும் கடை நடத்தி வருகிறார். 
சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே மனைவியின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகத் தீ, மனைவி மீது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
கழுத்தில் வெட்டு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவில் ரமேஷின் வீட்டில் இருந்து உமாவின் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, உமா கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் குழந்தைகள் கதறி அழுதபடி இருந்தனர்.
உடனே உமாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், உமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
கணவர் வெறிச்செயல்
இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, வெள்ளிச்சந்தை இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
முதற்கட்ட விசாரணையில் ரமேஷ், மனைவி உமா மீது சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. 
மேலும், இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற ரமேஷை வலைவீசி தேடி வருகிறார்கள். 
பரபரப்பு
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் இளம்பெண்ணை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story