6 வயது சிறுவன் பெல்டால் அடித்து கொலை
பெங்களூரு அருகே 6 வயது சிறுவன் பெல்டால் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு அருகே 6 வயது சிறுவன் பெல்டால் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் 2-வது திருமணம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா பின்னமங்களா கிராமத்தை சேர்ந்தவர் நேத்ரா. இவரது மகன் ஹர்ஷவர்தன் (வயது 6). நேத்ரா தனது முதல் கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து விட்டார். தனது மகனுடன் அவர் பின்னமங்களா கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கும் கார்த்திக் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு கார்த்திக்கை, நேத்ரா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தனது மகனை தன்னுடன் நேத்ரா வளர்த்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் இருந்து சிறுவன் ஹர்ஷவர்தன் அங்கும், இங்கும் ஓடி விளையாடியதாக தெரிகிறது. உடனே தான் சொல்வதை கேட்கும்படி சிறுவனிடம் கார்த்திக் கூறியுள்ளார்.
சிறுவன் கொலை
ஆனால் கார்த்திக் சொல்வதை கேட்காமல் சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. மேலும் கார்த்திக் மீது ஹர்ஷவர்தன் தெரியாமல் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கார்த்திக், சிறுவன் என்று கூட பார்க்காமல் கண்மூடித்தனமாக பெல்ட்டால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திலேயே சிறுவன் ஹர்ஷவர்தன் பரிதாபமாக இறந்து விட்டான்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெலமங்களா போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் சொல்வதை கேட்காமல் இருந்ததால், அவனை கார்த்திக் பெல்டால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story