சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 15.5 அடியாக உயர்ந்து உள்ளது.
கோவை
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 15.5 அடியாக உயர்ந்து உள்ளது.
சிறுவாணி அணை
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது. இந்த அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் கோவை மாநகராட்சி பகுதியில் 36 வார்டுகளுக்கு வழங்கப்படு கிறது.
மேலும் வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. இந்த அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும்.
மொத்தம் 49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை, கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதில் 45 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மழை பெய்த போது அணையில் 45 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் நிலவியது. இதனால் அணையின் நீர்மட்டம் 15 அடிக்கு கீழ் சரிந்தது.
நீர் பிடிப்பு பகுதியில் மழை
இந்த அணையில் இருந்து குடிநீருக்காக நாள்தோறும் 80 எம்.எல்.டி. அளவுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் கடைசி வால்வு அளவுக்கு சரிந்தது.
இந்த நிலையில் அரபிக் கடலில் தோன்றிய டவ்தே புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளாவில் மழை பெய்து வருகிறது. இது போல் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து குடிநீர் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- குடிநீர் தேவைக்காக சிறுவாணியில் இருந்து நாள்தோறும் 75.33 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கோடை காரணமாக அணையில் நீர்மட்டம் 15 அடிக்கும் கீழே சென்றது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 15.5 அடியாக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story