250 டன் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் முடக்கம்


250 டன் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் முடக்கம்
x
தினத்தந்தி 17 May 2021 1:17 AM IST (Updated: 17 May 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கால் ராஜபாளையம் பகுதியில் 250 டன் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் முடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர், 
அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கால் ராஜபாளையம் பகுதியில் 250 டன் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் முடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாம்பழ சீசன் 
வழக்கமாக ஆண்டுதோறும் மாம்பழ சீசன் என்பது கோடை காலத்தில் தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் சப்பட்டை, பஞ்சவர்ணம், பாலாமணி, கிளிமூக்கு உள்ளிட்ட பல்வேறு வகை மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதுண்டு.
 தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்யும் மா மரங்களில் இருந்து மாம்பழங்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். சராசரியாக இந்த நேரங்களில் வியாபாரிகள் மாம்பழங்களை கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்வது வழக்கம். 
பாதிப்பு
 இந்தநிலையில் ஊரடங்கால் மாவட்ட நிர்வாகம் மாம்பழ ஏல விற்பனையை வழக்கமான இடத்தில் இருந்து ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தது.
 கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையத்திற்கு வியாபாரிகள் வருவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த வாரம் நடந்த மாம்பழ ஏல விற்பனையில் 250 டன் மாம்பழங்கள் விற்பனையாகாத நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்முதல் 
வழக்கமாக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாக்களில் இருந்து வரும் மாம்பழங்களை கேரளா மற்றும் மதுரையிலிருந்து வரும் வியாபாரிகள் தான் மாம்பழ சீசனின் போது கொள்முதல் செய்வது உண்டு. 
ஆனால் ஊரடங்கால் கேரளாவிலிருந்தும், மதுரையில் இருந்தும் வியாபாரிகள் வர இயலாத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி கேரளா மற்றும் மதுரையில் இருந்து வியாபாரிகள் வருவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
 தோட்டக்கலைத்துறை மூலம் மாம்பழங்களை விற்பனை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வாய்ப்புள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
 விவசாயிகள் தினசரி மாம்பழங்களை பறித்து கொண்டு வந்தால் மாம்பழங்கள் கிலோ ரூ. 40 வரை ஏலத்தில் விற்பனை செய்யப்பட வாய்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அதிக அளவில் மாம்பழங்களை கொண்டு வருவதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்கும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளின் மாம்பழங்களை மதுரை பகுதிக்கு கொண்டு சென்று  நல்ல விலைக்கு விற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடவடிக்கை 
எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மாம்பழ விளைச்சல் அதிகம் உள்ள நிலையில் அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு இருந்தாலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாம்பழங்களுக்கு கட்டுப்படியாகும் விலை விவசாயிகளுக்கு கிடைக்க  மாற்று ஏற்பாடுகளை செய்து விவசாயிகள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

Next Story