காய்கறி, இறைச்சி கடைகள் இன்று முதல் இடமாற்றம்


காய்கறி, இறைச்சி கடைகள் இன்று முதல் இடமாற்றம்
x

அரியலூரில் காய்கறி, இறைச்சி கடைகள் இன்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அரியலூர்:

பொதுமக்கள் வருகை அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்க அனுமதித்துள்ளது.
இந்நிலையில் அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட், பள்ளிவாசல் தெரு, சின்னக்கடை தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. நகரில் நோய்த்தொற்று அதிகமாகி 6 பேர் இறந்த தகவல் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக காய்கறி, இறைச்சி வாங்க கூடும் இடங்களில் உள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும், நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று தினத்தந்தி நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இடமாற்றம்
இந்நிலையில் நகரில் உள்ள நகராட்சி மற்றும் தனியார் இடங்களில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் காய்கறி கடைகள், மீன், கோழி, இறைச்சிக்கடைகள் மற்றும் சாலையோர கடைகள், தள்ளுவண்டி காய்கறி கடைகள் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) முதல் அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், திருச்சி சாலையில் உள்ள காமராஜர் திடலிலும் காய்கறிகள், இறைச்சி விற்பனை நடைபெறும் என்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகர் தெரிவித்துள்ளார். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் நேற்று கடைவீதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story