முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்


முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.3½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 16 May 2021 7:51 PM GMT (Updated: 16 May 2021 7:51 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.3½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டாலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. அரியலூர் நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் இரும்பு தடுப்புகள் வைத்து, வாகனங்களில் வருபவர்களை போலீசார் தடுத்து விசாரணை செய்து அவசரத் தேவைக்கு மட்டும் நகருக்குள் வர அனுமதிக்கின்றனர். கடந்த 6-ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு போலீசார், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கி அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தனர். ஆனால் அதையும் மீறி பலர் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்து சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதன்படி நேற்று முன்தினம் வரை முக கவசம் அணியாமல் வந்த 1,514 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியின்றி கடைகளில் வியாபாரம் செய்த 112 பேரிடம் தலா ரூ.500 வீதம் ரூ.56 ஆயிரமும் என மாவட்டத்தில் உள்ள 14 போலீஸ் நிலைய பகுதிகளில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்றும் அரியலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story