மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,146 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,146 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
கோடைகாலம் தொடங்கியதை அடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கு கீழ் குறைந்து இருந்தது. கடந்த சில வாரங்களாகவே அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 400 கனஅடிக்கு கீழ் சென்றது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 398 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று திடீரென வினாடிக்கு 2,146 கனஅடியாக அதிகரித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 97.67 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.74 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story