அதிதீவிரமடைந்த ‘டவ்தே’ புயல்; மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா ஆலோசனை


அதிதீவிரமடைந்த ‘டவ்தே’ புயல்; மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா ஆலோசனை
x
தினத்தந்தி 17 May 2021 11:14 AM GMT (Updated: 17 May 2021 11:14 AM GMT)

‘டவ்தே’ புயல் அதிதீவிரமடைந்த நிலையில் மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்கு ‘டவ்தே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கரையை கடக்கிறது
அந்த புயல் தீவிர புயலாக மாறி, தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது.டவ்தே புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அமித்ஷா ஆய்வு
இந்தநிலையில், டவ்தே புயலை சமாளிப்பது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடனும், டாமன் டையு யூனியன் பிரதேச நிர்வாகியுடனும் அவர் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.இதில், 2 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், கலெக்டர்கள், மந்திரிசபை செயலாளர், மத்திய உள்துறை, சுகாதாரம், மின்சாரம் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்சார மாற்று வசதி
குறிப்பாக, புயல் தாக்கும் பகுதிகளில் உள்ள சுகாதார கட்டமைப்புகளின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், அமித்ஷா கூறியதாவது:-

புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், புயல் தாக்கும் பகுதிகளில் உள்ள கொரோனா ஆஸ்பத்திரிகள், ஆய்வுக்கூடங்கள், தடுப்பூசியை சேமிக்கும் குளிர்சாதன கூடங்கள் ஆகியவற்றில் மாநில நிர்வாகமும், மாவட்ட கலெக்டர்களும் போதிய மின்சார மாற்றுவசதியை ஏற்படுத்த வேண்டும்.வாகன போக்குவரத்து தடைபடும் ஆபத்து இருப்பதால், அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை போதிய அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும். அவை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புயல் தாக்கும் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து நோயாளிகளை 
அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அருகே நிறுவப்பட்டுள்ள தற்காலிக ஆஸ்பத்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால், அங்குள்ள நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்ற வேண்டும்.

ஆக்சிஜன் இருப்பு
ஆக்சிஜன் வினியோகம் தடைபடும் என்பதால், குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜனை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு மின்வினியோகம் தடைபடாமல் இருப்பதற்காக, மின்உற்பத்தி நிலையங்களின் பாதுகாப்புக்கு ேதவையான ஏற்பாடுகளை செய்ய ேவண்டும். குஜராத்தில் புயல் தாக்கும் பகுதிகள், தொழிற்சாலை நிறைந்த பகுதிகள் என்பதால் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசும், மத்திய அமைப்புகளும் ஒத்துழைப்பு அளிக்கும். பேரிடர் மேலாண்மை பிரிவுகளும், தன்னார்வ தொண்டர்களும் தயார்நிலையில் இருக்கும்வகையில் கலெக்டர்கள் செயல்பட வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை
மத்திய உள்துறை அமைச்சகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. எந்த மாநிலமும் எந்த நேரத்திலும் உதவி கேட்கலாம். அவசர உதவிகளுக்கு கடலோர காவல்படை, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை தயார்நிலையில் உள்ளன. கண்காணிப்பு விமானங்களும், ெஹலிகாப்டர்களும் கண்காணித்தபடி இருக்கும்.தேசிய பேரிடர் மீட்புப்படை, படகுகள், மரம் அறுக்கும் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்களுடன் 50 குழுக்களை தயார்நிலையில் வைத்துள்ளது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அமித்ஷா கூறியபடி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்பதாக குஜராத், மராட்டிய மாநில முதல்-மந்திரிகள் உறுதி அளித்தனர்.

அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அமித்ஷாவிடம் கூறியதாவது:-

ஏற்பாடுகள் தயார்
ஜம்போ சிகிச்சை மையங்கள், மற்ற சிகிச்சை மையங்களில் இருந்த கொரோனா நோயாளிகள் மழையில் இருந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மும்பையில் சில நோயாளிகள் 
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல கடலோர பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி, போக்குவரத்து தடையின்றி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மின் நிறுவனம், பொதுப்பணித்துறை ஊழியர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களும் திரும்பி உள்ளனர். மேலும் மாநிலத்தில் போதுமான அளவு மருந்து பொருட்கள் உள்ளது.புயல் காரணமாக இன்று குஜராத்தில் இருந்து 160 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டால், பிற இடங்களில் இருந்து அந்தளவு ஆக்சிஜனை எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்
இதுபோல், டவ்தே புயலை எதிர்கொள்வது பற்றி ஆராய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார்.இதில், தமிழ்நாடு, கேரளா உள்பட சில மாநிலங்களின் தலைமை செயலாளர்களும், மத்திய அமைப்புகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர். மத்திய, மாநில அமைப்புகளின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கொரோனா ஆஸ்பத்திரிகள் தடங்கலின்றி செயல்படவும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ராஜீவ் கவுபா கேட்டுக்கொண்டார். புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து மக்களை 
அப்புறப்படுத்துவதன் மூலம், ஒரு உயிரிழப்பு கூட நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Next Story