காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 May 2021 2:00 PM GMT (Updated: 17 May 2021 2:00 PM GMT)

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார்: கடந்த காலங்களில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அதே காலத்தில், கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டி பகுதிக்கு உரிய காலத்தில் தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே கால்வாய் பாசனம் மூலம் நிறைவேற்றப்படும் உபரி நீர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன்: மேட்டூர் அணையில் 95 அடிக்கு மேல் நீர்மட்டம் இருப்பதால் இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூன் 12-ந் தேதி அணையை தயக்கமின்றி திறக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை ஊழல், முறைகேடு இல்லாத திருத்தியமைக்கப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமாக மாற்றி அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீடு பிரிமியத்தொகையில் விவசாயிகளின் பங்குத்தொகை 10 சதவீதம் போக மீதமுள்ள 90 சதவீதத்தை தமிழகஅரசே ஏற்று பயிர் காப்பீடு திட்டத்தில் புதுமையை புகுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும்.

விசாரணைக்குழு

நசுவினிஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன்: உபரிநீர் என்ற பெயரில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள சரபங்கா திட்டத்தாலும், கரூர் அருகே நஞ்சை புகலூரில் கட்டப்படும் தடுப்பணை திட்டத்தாலும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தாலும் கல்லணைக்கு வரும் தண்ணீர் முற்றிலும் தடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்களை உடனே நிறுத்துவதுடன் இது தொடர்பாக செய்யப்பட்டுள்ள முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்: காவிரி டெல்டாவை அழிக்கும் உள் நோக்கத்தோடு சரபங்கா உபரிநீர் திட்டத்துக்காக மேட்டூர் அணை இடதுகரையை உடைத்து சட்டத்துக்கு விரோதமாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறாமலும், கீழ் பாசன விவசாயிகளின் கருத்தறியாமல் அவசர கோலத்தில், சுய நல நோக்கோடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தால் எதிர்காலத்தில் காவிரி டெல்டா அழிந்து போகும். எனவே சரபங்கா உபரிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

இலவச விதை, உரம்

கடலூர் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன்: பருவமழை ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கொட்டி தீர்த்துவிடுகிறது. இதற்காக காவிரி, கொள்ளிடத்தில் மேலணைக்கும், கீழணைக்கும் இடையே சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கதவணைகளை கட்டி மழை, வெள்ள நீரை தடுத்து சேமிக்கலாம். எனவே சரபங்கா உபரி நீர் திட்டத்தை கைவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் தற்போதைய அரசு செயல்பட வேண்டும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன்: விதை, பூச்சிமருந்து, உரம் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். மகசூல் லாபகரமாக கிடைக்க வேளாண்மைத்துறை நல்ல விதைநெல்லை வழங்க வேண்டும். ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு காலதாமதமின்றி மேட்டூர் அணையை திறக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story