தஞ்சை மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின


தஞ்சை மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 17 May 2021 2:20 PM GMT (Updated: 17 May 2021 2:20 PM GMT)

தஞ்சாவூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை தீவிரப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்த வார ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று மருந்துக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சை காவேரிநகரில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை அடைக்கப்பட்டிருந்தது. தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோர கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தது. சில ஓட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. மேலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் இருசக்கர வாகனங்கள், கார்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தன.

இதனால் தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, புதிய பஸ் நிலையம், கீழவாசல், தெற்கு வீதி, திருச்சி சாலை, கரந்தை, மகர்நோன்புசாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை, விளார் சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, புதுக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க முக்கிய சாலைகளில் இரும்பு கம்பிகளால் தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தி வாகன சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

அபராதம் விதிப்பு

விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்கள், கார்களில் சுற்றி வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததுடன், வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரத்தில் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக ரே‌‌ஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்பட்டன.

இதேபோல் கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, பூதலூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளியில் நேற்று முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பூதலூரிலும் நேற்று முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பூதலூர் தாலுகாவில் நேற்று 88 ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணத்தொகை சமூக இடைவெளியை கடைபிடித்து அமைதியான முறையில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் டோக்கன்களை கொடுத்து நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.

Next Story