டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்-அமைச்சர் அறிவிப்பார் அமைச்சர் துரைமுருகன் பேட்டி


டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்-அமைச்சர் அறிவிப்பார் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2021 2:25 PM GMT (Updated: 17 May 2021 2:25 PM GMT)

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக தூர்வாரும் பணிகள் திட்டம் செயலாக்கம் மற்றும் குறுவை சாகுபடி குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்கலாமா? அல்லது சிறிது நாட்கள் கழித்து திறக்கலாமா? என விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. 97 அடி தண்ணீர் இருந்தாலும் கூட தென்மேற்கு பருவகாற்று சூழல் தொடங்கினால் தான் கர்நாடகத்தில் மழை பெய்து நமக்கு தண்ணீர் வரும். எனவே அதை கணக்கிட்டு திறக்கலாமா? அல்லது இருப்பதை வைத்து கொண்டே திறக்கலாமா? என்பது தான் இங்கே கேள்வி. பெரும்பாலானவர்கள் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தடுப்பணைகள்

இந்த கருத்துக்களை முதல்-அமைச்சரிடம் தெரிவிப்போம். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என பலர் கோரிக்கைகள் வைத்துள்ளனர். மேலும் கடைமடைக்கு தண்ணீர் செல்லும் வகையில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தூர்வாருவது ஏதோ தூர் வாருகிறோம் என்ற நிலை இல்லாமல் சுத்தமாக செய்து தர வேண்டும். எடுக்கப்பட்ட மண்ணை எல்லாம் ஒழுங்காக கொட்ட வேண்டும் என கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தண்ணீர் திறக்க வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது. ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதால் விவசாயிகளின் குறைகளை கேட்க வேண்டும். அதன்பிறகு குடிமராமத்து திட்ட குறைபாடு உள்ளிட்ட பிற குறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்.

உரிய நேரத்தில் அறிவிப்பார்

மேட்டூர் அணையை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பாணை வெளியிடுவார். தூர்வாரும் பணி தொடர்பாக நிதித்துறைக்கு உரிய திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேட்டூர் அணை கரையை உடைத்து தண்ணீர் எடுத்தது தொடர்பாக பலமான எதிர்ப்பு கருத்துக்களை இங்கே தெரிவித்துள்ளனர். இது குறித்து நான் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன். சரபங்கா நீரேற்று திட்டம் தொடர்பாக இப்போது விவாதத்தை முன்வைக்க நான் விரும்பவில்லை. அதை நேரில் சென்று ஆய்வு செய்த பின் பார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story