ஊரடங்கு நேரத்திலும் சந்தைகளில் குவிந்த பொதுமக்கள்- நோய்த்தொற்று வேகமெடுக்கும் அபாயம்


ஊரடங்கு நேரத்திலும் சந்தைகளில் குவிந்த பொதுமக்கள்- நோய்த்தொற்று வேகமெடுக்கும் அபாயம்
x
தினத்தந்தி 17 May 2021 10:51 PM GMT (Updated: 17 May 2021 10:51 PM GMT)

ஊரடங்கு நேரத்திலும் சந்தைகளில் குவிந்த பொதுமக்களால் நோய்த்தொற்று வேகமெடுக்கும் அபாயம் உள்ளது.

ஈரோடு
ஊரடங்கு நேரத்திலும் சந்தைகளில் குவிந்த பொதுமக்களால் நோய்த்தொற்று வேகமெடுக்கும் அபாயம் உள்ளது.
அதிகபட்ச பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,232. ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பு உச்சத்தை தொட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் தினமும் 1,000-க்கும் கீழ் இருந்த பாதிப்பு ஒரேயடியாக அதிகரித்து உள்ளது.
இது மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களில் பலரும் வீடுகளில் அடைபட்டு கிடக்கிறார்கள். ஆனால் தினசரி காய்கறிகள் வாங்கவும், மளிகை பொருட்கள் வாங்கவும் ஏராளமானவர்கள் சந்தை மற்றும் கடைகளில் குவிந்து வருகிறார்கள்.
பொதுமக்கள் கூட்டம்
நேற்று அதிகாலையில் இருந்தே ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி சந்தை, சம்பத்நகர் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாட்டு இல்லாமல் பொதுமக்கள் குவிந்தனர்.
சம்பத்நகர் உழவர் சந்தையில் பெரும்பாலும் முதியவர்களே வந்திருந்தனர். அங்கு தனிமனித இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. ஆனால், நெரிசல் சந்தையை தாண்டி சாலையிலும் இருந்ததால் இடைவெளி இன்றி மக்கள் நெருக்கியடித்து சென்றனர்.
இதுபோல் வ.உ.சி. பூங்கா காய்கறி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையில் நேற்று வியாபாரிகளை விட பொதுமக்கள் அதிக அளவில் வந்தனர். 
இதனால் அங்கு இடைவெளி மற்றும் வரிசைப்படுத்துதலுக்காக அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலிகளையும் தாண்டி பொதுமக்கள் நெருக்கியடித்துக் கொண்டு சென்றனர். இது கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.
கொரோனா தொற்று அபாயம்
ஈரோடு மாநகர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அந்த வீடுகளில் குடும்பத்தினரும் உள்ளனர். ஒருசிலர், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் மீறி கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.
இன்னும் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த உடன் மேலும் 14 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்ற நடைமுறையை கைவிட்டு சகஜமாக சந்தைகளுக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு எளிதில் கொரோனா தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் அபாயம் சூழ்ந்து விடாமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story