நாகையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கலெக்டர் பிரவீன் நாயர் திறந்து வைத்தார்


நாகையில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் கலெக்டர் பிரவீன் நாயர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 May 2021 3:42 PM GMT (Updated: 18 May 2021 3:42 PM GMT)

நாகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை கலெக்டர் பிரவீன் நாயர் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட சித்த மருத்துவம் சார்பில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ மூலப் பொருட்களையும், சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் படுக்கை அறைகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் நாகை உள்பட 13 மாவட்டங்களில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. நாகையில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறியில்லாமல் நோய் தொற்றுடையவர்கள், கொரோனா தொற்றால் மூச்சு திணறல் பிரச்சினை உடையவர்கள் 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் குணமடையும் வகையில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

2-வது அலை வேகமாக பரவுகிறது

கடந்த 15 மாதங்களை ஒப்பிடும் போது நேற்று முன் தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதல் அலையைவிட, 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் கொரோனா 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுதிணறல் பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் தினசரி உயர்த்தப்பட்டு வருகிறது.ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளின் அருகே ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி இயங்கும் வகையில் செறிவூட்டும் கருவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே கூடுதலாக 100 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வேதாரண்யம் மற்றும் நாகை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசிடமிருந்து தங்குதடையின்றி ஆக்சிஜன் தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன்

இதுவரை மாவட்டத்தில் 2,638 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அறிகுறி இல்லாத தொற்றுடையவர்கள் 1400-க்கும் மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். 350 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் முழு நேர ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட சித்தா மருத்துவர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story