கொரோனாவின் தாக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்; 10-ல் 2 பேருக்கு தொற்று


கொரோனாவின் தாக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்; 10-ல் 2 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 May 2021 5:09 PM GMT (Updated: 18 May 2021 5:09 PM GMT)

கொரோனாவின் தாக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 10 பேருக்கு பரிசோதனை செய்தால் 2 பேருக்கு தொற்று உறுதி என கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், தடுப்பூசிகளின் இருப்புகள் குறித்து மருத்துவர்களுடன் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசின் சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருக்கிறது. பொதுமக்கள் அதை நல்லமுறையில் புரிந்து கொண்டு இந்த நோயின் தாக்கத்தை குறைக்க அரசுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இருந்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பொதுமக்கள் இந்த நோயின் தாக்கத்தை புரிந்து கொண்டு அத்தியாவசிய வேலைக்கு மட்டும் வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து தான் வர வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் எல்லாம் நிரம்பி கொண்டு வருகிறது. இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

10-ல் 2 பேருக்கு கொரோனா

இப்போது புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் இக்கட்டான நிலை நிலவி கொண்டு இருக்கிறது. அதை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். 200 படுக்கைகளை கூடுதலாக தயார் செய்து வைத்துள்ளோம். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். 10 பேருக்கு பரிசோதனை செய்தால் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. முக கவசம் அணிந்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும்.

தஞ்சை மாவட்டத்தில் 5,500 படுக்கைகள் தயாராக உள்ளன. 2 ஆயிரத்து 800 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மீதமுள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 70 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. 30 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்சிஜன் கருவிகள்

முன்னதாக சிட்டியூனியன் வங்கி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 100 ஆக்சிஜன் செறியூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு 75 கருவிகளும், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 15 கருவிகளும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 10 கருவிகளும் வழங்கப்பட இருக்கிறது. முன்னாள் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சார்பில் 1,000 முக கவசமும், 300 கொரோனா கவச உடைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிக்குமார், முன்னாள் முதல்வர் மருதுதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் பலர கலந்து கொண்டனர்.

Next Story