நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 20 May 2021 4:24 PM GMT (Updated: 20 May 2021 4:24 PM GMT)

நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரில் ஆய்வு செய்தார். இதனால் தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகிற 24-ந்் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காலை 10 மணிக்கு மேல் தேவையின்றி வாகனங்களில் வருவதை தடுக்க இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நாகை மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடுமையாக சோதனை நடத்தப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

சோதனையின் போது இ-பதிவு இல்லாமல் வரும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் எல்லை பகுதியில் தேவையின்றி வாகனங்கள் வருவது குறைந்துள்ளது. அதேபோல் மாவட்டத்திற்குள் காலை 10 மணிக்கு மேல் தேவையின்றி இரண்டு சக்கரவாகனங்களில் செல்வோர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இந்தநிலையில் நாகை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை தடுப்பு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகனசோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நாகையின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதனை தொடர்ந்து போலீசார் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதனால் ேதவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நாகூர்

இதே போல் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்து ஆவணங்கள் சரியாக உள்ளதா? என சரிபார்த்து அனுப்பிவைத்தனர்.

Next Story