திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 8 பேர் கைது
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள புதிய இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காமேஷ் (வயது 33). விவசாயி. இவர் காட்டு கூட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாரதி (22) என்ற மனைவியும், மித்திரன் என்ற மகனும், நிகிதா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி அன்று இரவு 7 மணியளவில் காமேஷ் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் இருளஞ்சேரி ஆலமரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் வெட்டிக்கொலை செய்தனர்.
இது குறித்து காமேசின் மனைவி பாரதி மப்பேடு போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அசோகன் தலைமையில் மணவாளநகர் இன்ஸ்பெக்டர்கள் கண்ணையா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சிவா மற்றும் தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். நேற்று முன்தினம் காமேசை கொலை செய்த கொலையாளிகள் 8 பேர் திருவள்ளூர் அடுத்த செல்லம்பட்டரை பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரம்பாக்கம் அருகே உள்ள புதிய இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30), குமாரச்சேரியை சேர்ந்த வசந்தகுமார் (21), சசிக்குமார் (21), நாட்டாமை என்கிற கோபாலகிருஷ்ணன் (24), சூர்யா (23), ராஜேஷ் (20) களாம்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த சேதுபதி (24), புதிய இருளஞ்சேரியை சேர்ந்த நாகராஜன் (29) ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், புதிய இருளஞ்சேரியை சேர்ந்த கமலக்கண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்தார். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து காமேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காமேஷ் மீது கமலக்கண்ணன் ஆத்திரத்தில் இருந்தார். மேலும் கோபாலகிருஷ்ணனின் உறவினரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காமேஷ் தரப்பினர் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காமேஷ் மீது கமலக்கண்ணன் மற்றும் கோபாலகிருஷ்ணன் அவரது உறவினர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அவரை ஊருக்குள் பார்க்கும்போது தகராறு செய்து அவரை விரட்டி அடித்துள்ளனர்.
கடந்த 18-ந்தேதியன்று மது குடித்து கொண்டிருந்த மேற்கண்ட 8 பேரும் மதுபோதையில் இனிமேலும் காமேசை உயிரோடு விடக்கூடாது என முடிவு கட்டி அவரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அவரை இருளஞ்சேரி ஆலமரம் அருகே வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் வெளி மாநிலத்திற்கு தப்பிச்செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
போலீசார் அவர்களை திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story