‘ரெம்டெசிவிர்’ மருந்து தருவதாக ரூ.1¼ லட்சம் மோசடி


‘ரெம்டெசிவிர்’ மருந்து தருவதாக ரூ.1¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 21 May 2021 5:52 AM GMT (Updated: 21 May 2021 5:52 AM GMT)

சிகிச்சை அளித்த டாக்டரின் பரிந்துரையின்படி, ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க சமூக வலைதளங்களில் தேடி பார்த்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ராம்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 36). இவரது தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் பரிந்துரையின்படி, ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க சமூக வலைதளங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் இருந்த ஒரு தனியார் மருந்து நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த நிறுவனத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து இருப்பு உள்ளதாகவும், அதை வினியோகம் செய்ய தயார் எனவும் அறிவித்தது. இதையடுத்து கணேஷ், கடந்த 13-ந் தேதி மடிப்பாக்கம் தனியார் வங்கி கிளையில் இருந்து அந்த மருந்து நிறுவனத்தின் ‘பேடிஎம்’ வங்கி கணக்கில் ரூ.1¼ லட்சம் செலுத்தினார். ஆனால் இதுவரையிலும் மருந்து வந்து சேரவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. பின்னர்தான் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததை கணேஷ் அறிந்தார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story