கொரோனாவால் நேரடி ஆலோசனை வழங்க இயலாத நிலை: வாட்ஸ்-அப் மூலம் பெண்கள் சட்டஉதவி பெறலாம் சார்பு நீதிபதி தகவல்


கொரோனாவால் நேரடி ஆலோசனை வழங்க இயலாத நிலை: வாட்ஸ்-அப் மூலம் பெண்கள் சட்டஉதவி பெறலாம் சார்பு நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 21 May 2021 7:50 PM IST (Updated: 21 May 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் நேரடியாக ஆலோசனை வழங்க இயலாத நிலையில் வாட்ஸ்-அப் மூலம் பெண்கள் சட்ட உதவி பெறலாம் என சார்பு நீதிபதி சுதா தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக தஞ்சை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திலும், வட்ட சட்ட பணிகள் குழு அலுவலகத்திலும் நேரடியாக சட்ட ஆலோசனை வழங்க இயலாத நிலை உள்ளது. இந்த காரணத்தால் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனைத்து விதமான இலவச சட்ட உதவிகள் வாட்ஸ்-அப் மற்றும் மின் அஞ்சல் போன்ற வலைத்தளங்கள் மூலமாக அளிக்கப்படும். மேலும் சட்ட பாதுகாப்பிற்கான சட்ட வழிமுறைகள் அளிக்கப்படும்.

தஞ்சை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உதவிக்கு அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாக உதவியாளர் மற்றும் சட்ட தன்னார்வ தொண்டர்களின் எண்ணிற்கு அழைத்து சட்ட உதவி பெறலாம். தாங்கள் தரும் விண்ணப்பங்களில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் பெயர், வயது, முகவரி மற்றும் செல்போன் எண்கள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

வாட்ஸ்-அப்

இந்த மனுக்கள் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் மூலமாக விசாரித்து மனுக்கள் மீதான தீர்வு அளிக்கப்படும். சட்ட உதவி ஆலோசனை கேட்போர் அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நாட்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும்.

04362-230776 என்ற மாவட்ட சட்ட பணிகளின் அலுவலக தொலைபேசி எண்ணிலும், 9894947837 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, பாபநாசம் ஆகிய வட்டங்களில் உள்ள சட்ட பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story