பழங்குடியின மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்
பழங்குடியின மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை வழங்கினார்.
கூடலூர்,
பழங்குடியின மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை வழங்கினார்.
தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தெப்பக்காடு மற்றும் ஏழுமுறம் ஆகிய பழங்குடியின கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதை நீலகிரி மாவட்ட இன்கோ சர்வ் தலைமை செயல் அலுவலரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலை வயது வரம்பின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து தற்காத்துக்கொள்ள சரியான முறையில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
போதிய படுக்கைகள்
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு பகுதியினர் தடுப்பூசி செலுத்தி விட்டு மறு பகுதியினர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தால் பயனில்லை.
இதன் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கிவிட்டு நோயில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கைகள், ஆக்சிஜன் போன்ற வசதிகள் உள்ளது. சில மாவட்டங்களில் ஆக்சிஜன், படுக்கைகள் பற்றாக்குறை என செய்தி வருகிறது.
இது போன்ற சிரமமான நிலை வரக்கூடாது என்பதற்காக தடுப்பூசி நமக்கு ஆயுதமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவரை சுமார் 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குடில் அமைக்கும் பணி
தற்போது பழங்குடியின மக்களிடமும் தொற்று பரவி வருகிறது. இதை தடுக்கவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதேபோன்று தொடர்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட கூடலூர் அரசு கல்லூரிக்கு தனியார் நிறுவனம் மூலம் வழங்கிய 100 படுக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாகு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் தொரப்பள்ளி பகுதியில் தொற்றுக்கு ஆளான பழங்குடியின மக்களை தனிமைப்படுத்துவதற்காக குடில் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story