விழுப்புரம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் 1,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்


விழுப்புரம் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் 1,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 21 May 2021 10:00 PM IST (Updated: 21 May 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காணை, பெரும்பாக்கம், கோலியனூர், வளவனூர், பஞ்சமாதேவி, பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென மழை பெய்தது. இரவு நேரத்தில் அவ்வப்போது காற்றுடனும், இடி- மின்னலுடனும் கூடிய பலத்த மழை கொட்டியது. இதில் விழுப்புரம் அருகே காணைக்குப்பத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், மழைநீரில் நனைந்து வீணானது. 

1000 நெல் மூட்டைகள்

விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் தார் பாயால் சரிவர போர்த்தி வைக்காததால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தது. இதுபற்றி அறிந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு திரண்டு சென்று, நெல் மூட்டைகளுக்கு அருகில் தேங்கியிருந்த தண்ணீரை வாரி இறைத்து வெளியேற்றினர். இருப்பினும் தண்ணீரில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை பரப்பி காய வைக்கவும் அங்கு போதிய இடவசதி இல்லாததால் செய்வதறியாமல் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். 

Next Story