மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி பலியானார். 4 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் செங்கல் சூளை தொழிலாளி பலியானார். 4 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்
பலத்த காற்றுடன் கன மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம், அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
மின்னல் தாக்கி தொழிலாளி பலி
வேதாரண்யம் தாலுகா அவரிக்காட்டில் வைரவன் பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தலைஞாயிறு வேளாணி மூந்தல் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 55) என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தபோது அவர் தங்கியிருந்த கொட்டகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தொழிலாளி காளிதாசை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த அவரது பேரன் விஸ்வா(4) மின்னல் தாக்கியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story