குளத்தின் சுற்றுச்சுவர் மீண்டும் உள்வாங்கியது


குளத்தின் சுற்றுச்சுவர் மீண்டும் உள்வாங்கியது
x
தினத்தந்தி 21 May 2021 10:24 PM IST (Updated: 21 May 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் மீண்டும் உள்வாங்கியது. பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.

நாகூர்:
நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் மீண்டும் உள்வாங்கியது. பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.
புயல்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு(2020) நிவர், புரெவி புயல்கள் எதிரொலியாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதில் பல லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்தன. நாகூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டவர் தர்காவிற்கு சொந்தமான தர்கா குளத்தின் சுற்றுச்சுவரில் தென்கரை, வடகரை, மேல்கரை மற்றும் கீழ்கரை பகுதிகள் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி திடீரென உள்வாங்கியது.  உடனே நகராட்சி நிர்வாகம் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் சேதம் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்தனர்.
நிதி ஒதுக்கீடு

மழையினால் சேதமடைந்த இடங்களை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 9-ந்தேதி பார்வையிட்டார். அப்போது நாகூர் தர்கா குளத்தையும் பார்வையிட்டு சீர் செய்ய ரூ.5.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
 இதை தொடர்ந்து ரூ.4.37 கோடி மதிப்பில் நாகூர் தர்கா குளத்தை சீர் செய்யும் பணியும், ரூ.1 கோடி செலவில் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்க காணொலி காட்சி  மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30-ந் தேதி சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.
 

மீண்டும் சுற்றுச்சுவர் உள்வாங்கியது
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நாகூர் தர்கா குளத்தின் வடகரையில் சுற்றுச்சுவர் மீண்டும்  உள்வாங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 
இதை தொடர்ந்து நேற்று காலை பொதுப்பணித்துறை ஊழியர்கள் வடகரை பகுதியில் சுற்றுச்சுவர் உள்வாங்கிய இடத்தில் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் சுவர் இடிந்து விழாமல் இருக்க கம்புகளை அமைத்து  இரு புறமும் வாகனங்களில் செல்லாமல் இருக்கவும், பொதுமக்கள் நடந்து செல்லாமல் இருக்கவும் தடை ஏற்படுத்தினர்.

Next Story