புதுச்சத்திரம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு: டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் கொடுத்தால் மருந்தகத்திற்கு ‘சீல்’ உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை


புதுச்சத்திரம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு: டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் கொடுத்தால் மருந்தகத்திற்கு ‘சீல்’ உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 May 2021 11:21 PM IST (Updated: 21 May 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் கொடுத்தால் மருந்தகத்திற்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று புதுச்சத்திரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

புவனகிரி, 

தமிழகத்தில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் யாருக்கேனும் காய்ச்சல் போன்ற உடல் பாதிப்பு ஏற்பட்டால், டாக்டர்களை அணுக வேண்டும், மருந்தகங்களில் (மெடிக்கல்) தாமாக மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தற்போது மருந்து கடைகளில் டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கிறார்களா என்று தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 

மருந்தகங்களில் ஆய்வு

அந்த வகையில்  பரங்கிப்பேட்டை ஒன்றியம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், புதுச்சத்திரம், கொத்தட்டை, முட்லூர் போன்ற பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ராதிகா தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிடம் டாக்டர்கள் சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது, அவ்வாறு யாரேனும் வந்தால் தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

‘சீல்’ வைக்கப்படும்

 இதையும் மீறி மருந்துகளை கொடுத்தால், சம்பந்தப்பட்ட மருந்தகத்திற்கு ‘சீல்’ வைக்கப்படுவதுடன் அதை சார்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆய்வின் போது  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜூனன், பேராசிரியர் ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story