ராயக்கோட்டை நகரின் அடையாள சின்னமாக இருந்த மைசூரூ 3-ம் போர் நினைவு சின்ன பீரங்கி அகற்றம்


ராயக்கோட்டை நகரின் அடையாள சின்னமாக இருந்த மைசூரூ 3-ம் போர் நினைவு சின்ன பீரங்கி அகற்றம்
x
தினத்தந்தி 22 May 2021 12:23 AM IST (Updated: 22 May 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

மைசூரூ 3-ம் போர் நினைவு சின்ன பீரங்கி அகற்றம்

ராயக்கோட்டை:
ராயக்கோட்டை நகரின் அடையாள சின்னமாக இருந்த மைசூரூ 3-ம் போர் நினைவு சின்ன பீரங்கி அகற்றப்பட்டதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பீரங்கி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மைசூரூ 3-ம் போர் நினைவு சின்னமாக உள்ள பீரங்கி இருந்து வந்தது. ராயக்கோட்டை நகரின் அடையாள சின்னமாக அந்த பீரங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பொக்லைன் எந்திரத்தால் அந்த பீரங்கி அகற்றப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை ஊராட்சி தலைவர் முருகன், கவுன்சிலர் கணேசன், வரலாற்று ஆர்வலர் தரணிராஜ் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று போலீசாரிடம் கேட்டனர். அப்போது அவர்கள் சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாடத்திற்கு இதை கொண்டு சென்று பின்னர் மீண்டும் ராயக்கோட்டையில் கொண்டு வந்து வைப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்டனம்
ராயக்கோட்டையில் அவசர, அவசரமாக போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பீரங்கியை அகற்றியதற்கு வரலாற்று ஆராய்்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
ராயக்கோட்டை மைசூரூ சமஸ்தானத்திற்கு உட்பட்டபோது 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ராயக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு பாராமஹாலை ஆட்சி செய்தவர் திப்புசுல்தான். அவர் தனது பீரங்கி படை கொண்டு ராயக்கோட்டையில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி மேஜர் கவுடி என்பவரை எதிர்த்து மைசூரூ மூன்றாம் போரை ராயக்கோட்டையில் 1791-ம் ஆண்டு ஜூலை 22-ல் நடத்தி அதில் தோல்வியுற்றார்.
பின்னர் மைசூரூ 4-ம் போர் ஸ்ரீரங்க பட்டனத்தில் நடைபெற்றது. ராயக்கோட்டையில் நடைபெற்ற அந்த மைசூரூ 3-ம் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ராயக்கோட்டை அருகே உள்ள எதிர்கோட்டை என்னும் ஊரில் ஆடு மேய்கும் நபர்கள் பார்த்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அப்போது தகவல் தெரிவித்தார்கள். அப்போது ராயக்கோட்டையில் பணியாற்றிய காவல் துறையினர் அப்போதைய டி.ஐ.ஜி. தேவாரமிடமும், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து 22.5.1983 அன்று ராயக்கோட்டையில் பீரங்கியை நிறுவினார்கள். இன்று வரை ராயக்கோட்டையில் போர் நடைபெற்றதற்கான அடையாளமாக அந்த பீரங்கி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பீரங்கி அகற்றப்பட்டுள்ளது வேதனையை தருகிறது. 
இவ்வாறு அவர்கள்கூறினார்கள்.

Next Story